Monday, February 20, 2012

எரிபொருள் விலையை குறைக்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் நடத்தி வரும் தொடர்​ போராட்டம் (தொகுப்பு)


பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 11-2-2012 அன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டன.

இதன்படி ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவினாலும்,
மண்ணெண்ணெய் ஒரு லீற்றல்

35 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய துறை அமைச்சு தெரிவித்தது.


இதற்கமைய, பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாய் எனவும்,டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 115 ரூபாய் எனவும், மண்ணெண்னை லீற்றர் ஒன்றின் புதிய விலை 110 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீர்கொழும்பு மீனவர்கள் போராட்டம்





எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து , எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் 12-2-2012 அன்று வீதி மறியல் போராட்டத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு - குடாப்பாடு தேவாலயத்துக்கு முன்பாக 12-2-2012  அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டமும் வீதி மறியல் போராட்டமும் தொடர்ந்தும் இரவு வரை இடம் பெற்றது.

குடாப்பாடு பிரதேசத்திலும் , போருதொட்ட பிரதேசத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ,  இந்த போராட்டம் எரிபொருள் விலைகளை குறைக்கும் வரை தொடர்ந்து 




இடம்பெறும் எனவும் ,இன்றைய தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்வதிலிருந்து விலகி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர் .


தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் எனவும், மண்ணெண்ணை மற்றும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனார்.


இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குடாப்பாடு தேவாலயம் முன்பாக வீதியில் டயர்களை போட்டு எரித்ததுடன், வீதியை மறித்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.


பொலிசார் மீனவர்களிடம் வீதிப்போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதும், மீனவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

இதேவேளை,நாளைய தினமும் வீதி மறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து இடம்பெறும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்







எரிபொருள் விலையை குறைக்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டாவது நாளாக வீதி மறியல் போராட்டம்

எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் 14 –2-2012 அன்று இரண்டாவது நாளாக வீதி மறியல் போராட்டத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

12-2-2012 அன்று ஞாயிற்றுக்கிழமை குடாப்பாடு மற்றும் போருதொட்ட பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமும் வீதிமறியல் போராட்டமும் 14 –2-2012  காலை முதல் நகரின் பிரதான வீதிகளுக்கும் பரவியது
நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி குடாப்பாடு, ஏத்துக்கால கொச்சிக்கடை ,வென்னப்புவ , மாரவில, சிலாபம் , ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகளில் வீதிகளை மறித்து இன்று மீனவர்கள் மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டனர்.

மீனவர்கள் பலர் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது .வீதிகளில் டயர்களை எரித்தும்; சிறிய மீன்பிடி படகுகளை வீதியில் இட்டு எரித்தும் பாரிய மரக்கட்டைகளையும் ,கொங்கிரீட் தூண்களையும் வீதிகளில் தடைகளாக இட்டும் , கனரக வாகனங்களையும் அரசாங்க போக்குவரத்து பஸ்களையும் வீதியில் குறுக்காக நிறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வீதியை முற்றாக மறித்ததுடன் , மீனவர்களும் வீதிக்கு குறுக்காக அமர்ந்னர்.

இதன் காரணமாக வீதிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. பாடசாலை சென்றுள்ள மாணவர்களை திருப்பி அழைத்து வருவதற்கு மாத்திரம் ஆர்ப்பாட்டக்காரர்கள்  வாகனங்களுக்கு அனுமதியளித்தனர்.
இது தொடர்பாக வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவிக்கையில்,

 ஞாயிற்றுக்கிழமை 12-2-2012 அன்று இரவு 7.30 மணியளவில் மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவும் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்னவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்தனர்.

இதன் போது நாளை 13-2-2012 அன்று முதல் பழைய (முன்னர் இருந்த ) விலைகளுக்கே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் .இது தொடர்பாக ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும் ,இதன் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் கலைந்து செல்லுமாறும் குறிப்பிட்டனர் .
ஆயினும், இன்றைய தினம் அவர்கள் குறிப்பிட்டது போல் எரிபொருள் விலைகள் முன்னர் இருந்த விலைகளுக்கு குறைக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாகவோ வேறு எந்த வகையிலும் அறிவிக்கப்படவில்லை .இதனை அடுத்தே தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தோம்.
மண்ணெண்ணை விலை இந்த முறை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது இதற்கு முன்னர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது .ஆகவே 45 ரூபாவால் அதன் விலை குறைக்கப்பட வேண்டும் .

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் வரையில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லப் போவதில்லை என்றனர் .













































தனியார் பஸ் பகிஸ்கரிப்பினாலும் ரயில் பயண சேவை நிறுத்தப்பட்டதாலும் நீர்கொழும்பில் பொது மக்களுக்கு அசௌகரியம்

இதேவேளை, தனியார் பஸ்களின் சேவை பகிஸ்கரிப்பு காரணமாகவும் , நீர்கொழும்பில் மீனவர்கள் மேற்கொண்ட வீதிமறியல் போராட்டம் காரணமாகவும் நீர்கொழும்பு நகரில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் ,தொழிலுக்கு செல்வோர் உட்பட பல்வேறு தரப்பினரும் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எரிபொருள் விலைகளை குறைக்குமாறு மீனவர்கள் மேற்கொண்டுள்ள மறியல் போராட்டத்தை அடுத்து நகரின் பிரதான வீதிகள் உட்பட முக்கிய வீதிகள் பல ஆர்ப்பாட்டகாரர்களால் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதனால் வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .
 
இதன் காரணமாக பாடசாலை மாணவர்களை நேர காலத்தோடு பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அத்துடன் பஸ் நிலையங்களில் பெரும் எண்ணிக்கையானோர். காலை முதல் பஸ்ஸுக்காக காத்திருந்ததையும் காணமுடிந்தது.
 
இதேவேளை, தொழிலுக்கும் ஏனைய கருமங்களுக்காகவும் பஸ் வண்டிகளிலும் ரயிலிலும் தூர இடங்களுக்கு சென்ற நீர்கொழும்பு மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கினர்.

நீர்கொழும்பில் மீனவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சிலாபத்திற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் புகையிரத போக்குவரத்துக்கும் தடையை ஏற்படுத்தியதை அடுத்து, நீர்கொழும்பு ரயில் நிலையத்தினூடாக செல்லும் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டன .

நீர்கொழும்பு , கொச்சிக்கடை பிரதேசங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை அவதானிக்க முடிந்தது.

நீர்கொழும்பு - சிலாபம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதை அடுத்து தூர இடங்களிலிருந்து பயணித்த பயணிகள் பஸ்கள் இன்றி செய்வதறியாது நிற்கதி நிலையில் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.



நீர்கொழும்பு மீனவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்



நீர்கொழும்பு மீனவர்கள் மீது 14 –2-2012 அன்று பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, மீனவர்கள் 14 –2-2012  அன்றைய தினமும் மூன்றாவது நாளாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு கடற்கரை வீதி தேவாலயத்திற்கு முன்பாக மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அதனை களைப்பதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டதால் அந்த இடத்தில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளனர்.தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதேவேளை, அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கேற்ப மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபா மானியமும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு  25 ரூபா மானியமும் வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த மானியத் தொகையினை மீனவர்கள் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.  






சிலாபம் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைப் பிரயோகம் : ஒருவர் உயிரிழப்பு , மூவர் காயம்


இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக சிலாபம் கரையோரப் பகுதியில் இன்று15-2-2012 அன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் பகுதியில் 15-2-2012 அன்று  முற்பகல் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்கு கண்ணீர்புகைப் பிரயோகமும் துப்பாக்கிப் பியோகமும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அன்ரனி பெர்னாணடோ என்ற 35 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடுபட்டு மரணமாகியுள்ளார்.

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டதாகவும், இதனால் அவர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.


சிலாபத்தில் மரணமான மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரு தினங்கள் துக்க தினம் அனுஸ்டிப்பு




சிலாபத்தில்  15-2-2012 அன்று மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிசூட்டில் மரணமான அன்ரனி பெர்னாண்டோ என்ற மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டு தினங்கள் துக்கதினம் அனுஷ்டிக்க முடிவெடுத்தனர்.

அதற்காக, நீர்கொழும்பு மீனவர்கள் இரு தினங்கள் கடலுக்கு தொழிலுக்காக செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது .

இதேவேளை, இன்றைய தினமும் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் , கலகம் அடக்கும் பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.



மீனவர் படுகொலைக்கு எதிராக ஜே.வி.யின் மாற்றுக் குழுவினர் நகரில் ஆர்ப்பாட்டம்


சிலாபத்தில் மீனவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் எரிபொருள் அதிகரிக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.யின் மாற்றுக் குழுவின் நீர்கொழும்மபு பிரிவினர் 16-2-2012 அன்று வியாழக்கிழமை  பிற்பகல் 3 மணியளவில் நீர்கொழும்பு நகர மத்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதன் போது அவர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஒரு மணித்தியாலமாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.























எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக மனோ கணேசன் படகில் பயணம்



தொடர்ந்து, சிலாபத்தில் இம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான மீனவரின் படுகொலைக்கும் எரிபொருள் விலையேற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு நகரில் 17-2-2012 அன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.


நீர்கொழும்பு - தளுபத்தை தேவாலயத்திற்கு முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக நீர்கொழும்புசிலாபம் பிரதான வீதியூடாக நீர்கொழும்பு பிரதான வீதிக்கு வந்தடைந்தது . பின்னர் நகரின் மத்தியில் மணிக்கூட்டு கோபுரம் அருகில் கூட்டம் இடம்பெற்று ,மீண்டும் கடற்கரை தெரு வழியாக வந்த பேரணியில் ஈடுபட்டோர்களில் முக்கியஸ்தர்கள் பலர் நண்பகல் 12 மணியளவில் ஹெமில்டன் வாவியினூடாக சிறிய படகுகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி பயணித்தனர்.

ஐக்கிய எதிர்கட்சியினர் அமைப்பும் சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு பேரணியில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கனேசன் ,ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன ,தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகேநீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே .க உறுப்பினர்கள் , சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர் பிரிட்டோ பெர்னாந்து,மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

மணிக்கூட்டு கோபுரம் அருகில் இடம்பெற்ற கூட்டத்தி;ல் மனோ கணேசன் உரையாற்றுகையில் இந்த அரசாங்கத்தின் மோசமான , கேவலமான அறிவீனமான செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம் ,தற்போது எமது போராட்டம் ஆரம்பமாகியுள்ளது .இனிமேல் இந்த போராட்டம் தொடரும் .எரிபொருள் விலை அதிகரிப்பானது நடுத்தர மக்களையும், குறைந்த வருமானமுடையவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது . அடக்கு முறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் உள்ளது என்றார் .

இதேவேளை நீர்கொழும்பு மீனவர் கடலுக்கு தொழிலுக்கு செல்லாமையால் நீர்கொழும்பில் உள்ள திறந்த மீன் விற்பனை சந்தைகள் மற்றும் மீன்விற்பனை சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அத்துடன் நீர்கொழும்பு களப்பில் மீன்பிடி படகுகள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டபடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.

































எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

எரிபொருட்களின் ; விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதர்ப்பு தெரிவித்து 18-2-2012 அன்று சனிக்கிழமை காலை  நீர்கொழும்பு பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு நகர மத்தியில் கிரீன்ஸ் வீதியில் இடம் பொற்றது.

நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களை சேர்;ந்த பெண்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்;டவர்களாவர்
சிலாபத்தில் அன்ரனி பெர்னாந்து என்ற மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.


எரிபொருட்களின்; விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பொருளாதார சுமை தாங்க முடியாத அளவு இருப்பதால் பெண்கள் என்ற ரீதியில் தங்களது எதிர்பை தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டனர்.

 மீனவரின் இறுதிக் கிரியைகளின் போது ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு




எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சிலாபத்தில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போது துப்பபாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மீனவரின் இறுதிக் கிரியைகள் (18-2-2012) அன்று இடம்பெற்றன.

இறுதிக் கிரியைகளின் போது கலவரத்தில் ஈடுபடக் கூடாதென சிலாபம் பதில் நீதவான் நிஸங்க நாணயக்கார உயிரிழந்த மீனவரான அந்தோனி ஜோசப்பின் நெருங்கிய ஐந்து உறவினர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

எரிபொருள் நிவாரணம் வேண்டாம் பழைய விலைக்கே தரவும் -அரசாங்கத்திடம் மீனவர்கள் வற்புறுத்தல்


அரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் நிவாரணம் தமக்கு வேண்டாம் எனவும் விலை அதிகரிப்புக்கு முன்னர் விற்பனை செய்த பழைய விலைக்கே எரிபொருள் தமக்கு தரப்பட வேண்டும் என்றும் மீனவ சங்கங்களின்  பிரதிநிதிகள் 19-2012 அன்று  அரசாங்கத்தை வற்புறுத்தினர்.

நீர்கொழும்பு , தம்மிட்ட கார்தினல் குரே நிலையத்தில் இடம் பெற்ற விசேட கூட்டத்தின் போதே மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்க அமைச்சர்களிடம் இதனை வற்புறுத்தி கூறியுள்ளனர்.

பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன . மேல்மாகாண மீன் பிடித் துறை அமைச்சர் நிமல் லான்ஸா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே . கொழும்பு - முகத்துவாரம் முதல் புத்தளம் வரையுள்ள மீனவ சங்கங்களை சேர்ந்த 100 பேர் வரையான பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர் .

இதன்போது எதிர்வரும் புதன்கிழமை இந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தமது முடிவை தெரிவிப்பதற்கு இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது .

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி வரும் என்று மீனவ சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .

இதேவேளை, இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை எதிர்வரும் 22-2-2012 புதன்கிழமை வரை கடலுக்கு செல்வதில்லை என நீர்கொழும்பு மீனவர்கள் தீர்மானித்துள்ளனர் .


கடந்த 13 ஆம் திகதி முதல் மீனவர்கள் தொழிலுக்காக கடலுக்கு செல்லாமையினால் சிறியளவில் மீன் பிடித்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பெரும் பொருளாதார பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக மீனவ பெண்கள் தெரிவித்தனர்.


ஜே.வி.பி .யும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் உள்ளன


சிலாபம் மற்றும் கம்பஹாவில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னால் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே என்று மீன் பிடித்துறை மற்றும் நீர்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மானியம் தொடர்பாக தான் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், இதன்போது சிலாபம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்ததாகவும், அவர்கள் எரிபொருள் மானியத்தை பெற்றக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தாகவும் அமைச்சர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார் .

No comments:

Post a Comment